சுடச்சுட

    

    இளைஞர்களிடம் விவசாய ஆர்வத்தை வளர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

    By DIN  |   Published on : 24th December 2017 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளைஞர்களிடம் விவசாயம் குறித்த ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வலியுறுத்தினார்.
    கடலூர் மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பின் சார்பில், உ லக விவசாயிகள் தின விழா கடலூர் நகர அரங்கில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவுக்கு உழவர் மன்றக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் கார்மாங்குடி பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கண்காட்சி அரங்கைத் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: விவசாயம் என்றாலே பிரச்னை குறித்து பேசுவோர்கள் மத்தியில், பிரச்னைகளை மீறி உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்டும் கதாநாயகர்களும் உள்ளனர்.
    அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பங்கள் மிகப் பெரிய அளவிலான பண்ணை விவசாயங்களுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும். நமது மண்ணுக்கு, சூழ்நிலைக்குத் தேவையான விவசாயத் தொழில்நுட்பங்களை உள்ளூரில் சிறந்து விளங்குவோரிடமிருந்து பெற்றுச் செயல்படுத்த வேண்டும்.
    கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரையில், 93 சதவீத விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள் பட்டியலில் வருபவர்களே. எனினும், இங்கு அனைத்து விதமான பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
    விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்ற எண்ணம் கிராமப்புற இளைஞர்களிடத்தில் உள்ளது. எனவே, அவர்கள் அந்தத் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. இதனை அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விவசாயத் தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்கவும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார் அவர். விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற டி.வெங்கடபதி பேசியதாவது: தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த நான், இன்றைக்கு மாதம் ரூ. ஒரு கோடி சம்பாதிக்கும் நிலையைப் பெற்றுள்ளதற்குக் காரணம் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுத்துவதால்தான் என்றார்.
    மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆர்.நாட்ராயன், வேளாண் வணிகத் துணை இயக்குநர் பொ.ஜெயக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் ஆர்.ராஜாமணி ஆகியோர் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் விளக்கினர்.
    முன்னதாக, விவசாயிகள் கையேடு வெளியிடப்பட்டதோடு, இயற்கை விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உழவர் மன்றக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் கோ.விஜயக்குமார் வரவேற்க, பொருளாளர் சீ.விஜயக்குமார் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai