சுடச்சுட

    

    கலப்பின நெல் விதையால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்

    By DIN  |   Published on : 24th December 2017 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறிஞ்சிப்பாடி பகுதியில் உயர்ரக நெல் விதையான பிபிடியை (ஆந்திர பொன்னி) விதைத்த விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்படும் எனக் கவலை அடைந்துள்ளனர்.
    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி தெற்கு, குள்ளஞ்சாவடி, ராவணக்குப்பம், புலியூர்காட்டுசாகை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்ட பிபிடி (ஆந்திர பொன்னி) என்ற உயர் ரக நெல் விதையை நடவு செய்துள்ளனராம். இந்த ரகம் நடவு செய்த 140 நாள்களில் அறுவடைக்குத் தயாராகும்.
    ஆனால், குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் வழங்கப்பட்ட விதை நெல்லில் கலப்பு விதை 20 சதவீதத்துக்கு மேல் விளைந்துள்ளதாம். இவை அனைத்தும் கதிர்விட்டு சாய்ந்துள்ள நிலையில், மீதமுள்ள 80 சதவீதம் பிபிடி நெல் ரகம் தற்போதுதான் தண்டு பெருத்து கதிர் விடும் நிலைக்கு வந்துள்ளதாம்.
    ஒவ்வோர் விவசாயியும் தற்போது வரை ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரையில் செலவு செய்துள்ளதாகவும், தற்போது விளைந்துள்ள கலப்பு ரகம் நெல்லை வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வரமாட்டர்கள் என்றும், அப்படியே வாங்கினாலும் உரிய விலை கிடைக்காது எனவும் குள்ளஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த வேளாண்மை உதவி அலுவலர் (ஓய்வு) தனவேல், குறிஞ்சிப்பாடி தெற்கு வசந்தகுமார் ஆகியோர் கூறினர்.
    மேலும், கலப்பின ரகத்தை அறுவடை செய்தால் 80 சதவீதம் குறைவாக விளைந்துள்ள உயர் ரக நெல் நஷ்டமாகும். உயர் ரக நெல்லுக்காக காத்திருந்தால் தற்போது விளைந்துள்ள 20 சதவீதத்துக்கும் மேலான கலப்பின நெல் சேதமாகும்.
    இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட கலப்பின நெல் விதையால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
    பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கடன் பெற்று விவசாயம் செய்துள்ள விவசாயிகள் விதை நெல்லாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர்தான் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் விதை 90 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டிருக்கும். குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மைய வேளாண் அதிகாரிகள் பிபிடி (ஆந்திர பொன்னி) ரகத்தை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.
    தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத நெல் ரகத்தை எப்படி விவசாயிகளுக்கு வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இந்த நெல் ரகத்தை நடவு செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையினரும் விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai