சுடச்சுட

  

  கடலூரில் பொதுமக்களே கழிவுநீர்க் கால்வாயைச் சீரமைத்து வருகின்றனர்.
  கடலூர் நகராட்சிக்கு உள்பட்டது காமராஜ் நகர், பெரியார் நகர் பகுதிகள். வெள்ளிக் கடற்கரை செல்லும் சாலையில் உள்ள இந்த நகர்களில் சுமார் 350 குடியிருப்புகள் உள்ளன. நகருக்கான நுழைவுவாயில் முன்பாகச் செல்லும் கழிவுநீர்க் கால்வாயைக் கடந்த சில மாதங்களுக்கு முன் கடலூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தப்படுத்தினர். அப்போது, வாய்க்கால் மீதுள்ள சிமென்ட் சிலாப்புகளை அப்புறப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். பின்னர், புதிதாக சிலாப்புகளை அமைக்காததால் அந்தப் பகுதியினர் நகருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
  இதைத் தொடர்ந்து மற்ற இடங்களிலிருந்து அப்புறப்படுத்திய சிலாப்புகளை அமைத்து தாற்காலிகமாகப் பாதை அமைத்துக் கொடுத்த நகராட்சி நிர்வாகம் விரைவில் நிரந்தரப் பாதை அமைக்கப்படும் என தெரிவித்தது.
  எனினும், நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்தப் பகுதியினர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
  இதற்கிடையே, தாற்காலிகப் பாதையைக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் அண்மையில் கழிவுநீர்க் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்தப் பகுதியினர் ஒன்றுகூடி கால்வாயைத் தாங்களே சீரமைப்பது என்று முடிவு செய்து, பொதுமக்களிடம் பண வசூல் செய்து, புதிதாக கால்வாய் கட்டும் பணியைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
  இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், 'அரசுக்கு வரியைக் கட்டியும் தங்களுக்குப் போதுமான வசதிகள் செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பு, தேவை கருதி நாங்களே சொந்தச் செலவில் பணிகளை மேற்கொள்கிறோம்' என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai