சுடச்சுட

    

    விளைந்தும் பலனில்லை!: பன்னீர் கரும்பு விவசாயிகள் கவலை

    By DIN  |   Published on : 26th December 2017 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதிகளில் பன்னீர் கரும்பு அமோக விளைச்சல் கண்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்கி கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். விளைச்சல் அமோகமாக இருந்தாலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    கடலூர் மாவட்டம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டாரத்துக்கு உள்பட்ட வேகாக்கொல்லை, பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, சத்திரம், சமுட்டிக்குப்பம், சிவநந்திபுரம், வெங்கடாம்பேட்டை, ஆராய்ச்சிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
    புயல், மழை - வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக பன்னீர் கரும்பு விவசாயிகள் நஷ்டமடைந்து வந்தனர். நிகழாண்டு சீரான இடைவெளியில் நின்று பெய்த மழையால் பன்னீர் கரும்பு செழித்து வளர்ந்து அமோக விளைச்சல் கண்டுள்ளது.
    கடந்த இரண்டு வாரங்களாக வெளியூர் வியாபாரிகள் இந்தப் பகுதியில் முகாமிட்டு பன்னீர் கரும்பை வாங்கி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். 20 கழிகள் கொண்ட ஒரு கட்டு பன்னீர் கரும்பு ரூ. 260 முதல் 340 வரையில் அதன் அளவு மற்றும் தரத்துக்கு தகுந்தால் போல விலை போவதாகவும், விளைச்சல் அமோகமாக இருந்தாலும், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து பத்திரக்கோட்டை விவசாயி ப.தேவராஜ் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக பன்னீர் கரும்பு பயிர் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் செய் நேர்த்தி செலவு, கூலி உயர்ந்து வருகிறதே தவிர, கரும்பின் விலையோ, விவசாயிகளின் வாழ்க்கைத் தரமோ உயரவில்லை. அண்மையில் பெய்த மழையின் காரணமாக நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
    சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை, வேலூர் பகுதிகளில் மழையின்மையால் பன்னீர் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அங்குள்ள வியாபாரிகள் இங்கு முகாமிட்டு பன்னீர் கரும்பை வாங்கி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். கரும்பை வாங்கும் வியாபாரிகளுக்கு 100 கட்டுக்கு 10 கட்டு இலவசமாக வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,000 கட்டுகள் கிடைக்கும்.
    தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பன்னீர் கரும்பு கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது 2 அடி கரும்பை வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது முழு கரும்பு வைத்து படைப்பதுதான் தமிழர்களின் வழக்கம். எனவே, குடும்ப அட்டைதாரர்களுக்கு முழுக் கரும்பை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.
    விவசாயி ஞானவேல் கூறியதாவது: ஏக்கர் ஒன்றுக்கு ஆரம்பம் முதல் அறுவடை வரையில் சுமார் ரூ. 1.60 லட்சம் வரை செலவாகிறது. விற்பனை மூலம் சுமார் ரூ. 2 லட்சம் வரையில் கிடைக்கும். 8 மாதம் கடுமையான உழைப்பால் ரூ. 40 ஆயிரம் மட்டுமே ஈட்ட முடியும். இதைக் கொண்டுதான் குடும்பச் செலவு, வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்ட வேண்டும். உள்ளூர் வியாபாரிகள் தற்போதுதான் வரத் தொடங்கியுள்ளனர். இதனால், கரும்புக்கான கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு இருக்கும் என நம்புகிறோம் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai