சுடச்சுட

    

    13 ஆண்டுகளுக்குப் பிறகும் சோகம் தீரவில்லை: சுனாமிக்கு குடும்பத்தினர் 5 பேரை பறிகொடுத்த மீனவர் கண்ணீர்

    By DIN  |   Published on : 27th December 2017 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுனாமிக்கு தனது குடும்பத்தினர் 5 பேரை பறிகொடுத்த மீனவர், 13 ஆண்டுகளுக்குப் பிறகும் சோகத்தை கண்ணீராக வெளிப்படுத்தினார்.
    கடலூர் சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.பலராமன் (65). இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகள்கள் சுசித்ரா, மஞ்சு, சஷ்மிதா, நசிரா, சோபியா. மகன் கிஷோர். ஆழிப் பேரலையின் தாக்குதலுக்கு இவர் தனது மனைவி, மகள்கள் சுசித்ரா, மஞ்சு, சஷ்மிதா, மகன் கிஷோர் ஆகியோரை பறிகொடுத்துவிட்டு அந்தச் சோகம் தீராமல் தற்போதும் கண்ணீரோடு வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் 5 பேரது புகைப் படங்களுக்கும் மாலையிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது நினைவாக உறவினர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
     2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதியன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை பாதிப்புகள் குறித்து அவர்  கூறியதாவது: எனது மூத்த மகள் நசிரா தனியார் கடையில் வேலைப்பார்த்து வந்தார். அவரை கடையில் சென்று விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எனது மகன் கிஷோர், அப்பா நானும் வருகிறேன் என்றார். அக்காவை விட்டுவிட்டு வருகிறேன் என்றுகூறிச் சென்றேன். 
     மகளை கடலூரில் விட்டுவிட்டு வீடு திரும்புகையில் எங்கு பார்த்தாலும் மரண ஓலமாகக் கேட்டது. கடல் அலை ஊருக்குள் புகுந்துவிட்டதாகக் கூறினார்கள். எனது குடும்பம் என்ன ஆனது என்றே தெரியாமல் தவித்தபோது வீடு இடிந்துவிட்டதாக மற்றவர்கள் கூறியதோடு அங்கும் யாரும் இல்லையென தெரிவித்தனர். இதனால், குடும்பத்தினர் தப்பியிருப்பார்கள் என்று நினைத்து ஊருக்குள் சென்றேன். முதலில் எனது சகோதரி மேகலா உயிரற்ற சடலமாக தண்ணீர் மிதந்துக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்த படகில் ஏற்றி விட்டு, பதைபதைக்கும் நெஞ்சுடன் முன்னேறிய போது எனது மனைவியின் சேலை ஒரு முள்புதருக்குள் சிக்கியிருப்பதை பார்த்து அங்கே சென்றேன்.  அங்கு, புதருக்குள் அவர் கிடந்தார். அவரையும் படகில் ஏற்றியபோது, எனது மகள் சுசித்ரா அங்கு சடலமாக கிடத்தப்பட்டிருந்தார். தலையே வெடித்து விடும் போல் இருந்தது. அடுத்தடுத்து 5 பேரை பறிகொடுத்து விட்டு இருந்த போது ஒரே ஆறுதலாக மகள் சோபியா உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். மனதை தேற்றிக்கொண்டு 5 பேருக்கும் இறுதிச் சடங்கு செய்தேன்.  தற்போது 2 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த பின்னர், எனது வாழ்க்கை தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். 
     இதனையடுத்து ஊர் பெரியவர்கள் வற்புறுத்தியதால் மறுதிருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகள் உள்ளனர். ஆழிப் பேரலை நினைவுகள் என் மனதைத் தாக்கி என்னை நிலை குலையச் செய்யும் போதெல்லாம் தற்போதுள்ள 2 குழந்தைகள் முகமே எனக்கு ஆறுதல் அளிக்கிறது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai