அரசின் திட்டங்களைச் செயல்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: ஆட்சியர்
By நெய்வேலி, | Published on : 28th December 2017 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரசின் திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், பைத்தாம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராம சபை, மனுநீதி நாள் முகாம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அனைத்துத் துறை உயரதிகாரிகளுடன் அரசுப் பேருந்தில் பயணித்தார்.
முகாம் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுகாதாரம், வேளாண், தொட்டக்கலை, வேளாண் பொறியியல், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட் டனர்.தொடர்ந்து, சிறப்பு கிராம சபைக் கூட்டமும், மனுநீதி நாள் முகாமும் நடைபெற்றன. முகாமில் 775 பயனாளிகளுக்கு ரூ. 1.03 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில்தான் மனுநீதி நாள் முகாம் நடத்தும் நடைமுறை உள்ளது. இந்த முகாமில் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளும் குறிப்பிட்ட கிராமத்துக்கு வந்து மக்களை சந்தித்து மனுக்களைப் பெற்று, குறைகளை நிவர்த்தி செய்கின்றனர்.
குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதியே அரசு பல்வேறு திட்டங்களை வகுக்கிறது. இவ்வாறான திட்டங்கள் வெற்றி பெற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 957-ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 2011-ஆம் ஆண்டில் 833-ஆகக் குறைந்துள்ளது. விழிப்புணர்வு, சட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது 900-ஐ தாண்டியுள்ளது. பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு சமமாகப் பாவிக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.