Enable Javscript for better performance
சீரமைக்கப்படாத மின்மாற்றியால் விவசாயம் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சீரமைக்கப்படாத மின்மாற்றியால் விவசாயம் பாதிப்பு

    By  நெய்வேலி,  |   Published on : 29th December 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலிருப்பு கிராமத்தில் பழுதடைந்த மின்மாற்றி நான்கு மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாததால், அந்தப் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
     கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது மேலிருப்பு கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். நெல், மணிலா, மரவள்ளிக் கிழங்கு, பலா, முந்திரி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன.
     கடந்த 2011-ஆம் ஆண்டு தானே புயல் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அரசு வடக்கு தெருவில் மின்மாற்றியை அமைத்து விவசாய நிலங்களில் 50 சதவீத மானியத்தில் தனி நபருக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் வழிவகை செய்து கொடுத்தது.
     கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் இந்த மின்மாற்றியை உடைத்து, அதில் இருந்த தாமிரக் கம்பியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுநாள் வரையில், மின்மாற்றியைச் சீரமைத்து வைக்காததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.
     இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வெ.பழனிமுருகன் கூறியதாவது: கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மின்மாற்றில் இருந்த தாமிரக் கம்பிகளை மர்ம நபர்கள் திருடுச் சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் மின்மாற்றி சீரமைத்து அமைக்கப்படவில்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கால் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
     எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
     தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பண்ருட்டி வட்டக் குழுவைச் சேர்ந்த ஆர்.மதியழகன் கூறியதாவது:
     வடக்குத் தெருவில் உள்ள மின்மாற்றி கடந்த 4 மாதங்களாகச் சீரமைக்கப்படாத நிலை தொடர்கிறது. மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைத்து அமைக்காததால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு, தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருகின்றன. தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது மின்மாற்றியில் தாமிரக் கம்பி திருடப்படும் சம்பவங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
     இதுகுறித்து மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் ஏ.கார்த்திகேயன் கூறியதாவது:
     வடக்குத் தெரு மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து, காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவலறிக்கை பெறவே ஒரு மாத காலம் ஆனது. இதற்குத் திட்ட மதிப்பு தயாரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். தற்போது, மின்மாற்றி தட்டுப்பாடு உள்ளதால் மாற்று மின்மாற்றியைப் பெற்று வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai