Enable Javscript for better performance
நகராட்சி அலுவலர் மீதான தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சி அலுவலர் மீதான தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

    By DIN  |   Published on : 30th December 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நகராட்சி அலுவலர் மீதான தாக்குதலைக் கண்டித்து, துப்புரவுப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர் முதுநகர் வசந்தராயன்பாளையத்தில் நகராட்சி சார்பில் பொதுக் கழிப்பறை கட்டுப்பட்டது. 
    எனினும், ஒப்பந்ததாரருக்கு முழுமையாகப் பணம் வழங்கப்படவில்லை என்பதால், இந்தக் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு 6 மாதத்துக்கு மேலாகியும் திறக்கப்படாமலே உள்ளது. இதனால், அந்தப் பகுதியினர் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் (52), துப்புரவுப் பணியாளர் ஜெய்சங்கர் (45) உள்ளிட்ட பணியாளர்கள் அங்கு சென்று கழிப்பறையைத் துப்புரவு செய்யும் பணிக்காக பூட்டை உடைத்ததாகத் தெரிகிறது.
    தகவலறிந்து அங்கு வந்த ஒப்பந்ததாரர் முழுமையாகப் பணம் வழங்காமல் கழிப்பறையைத் திறக்கக் கூடாது என தெரிவித்தாராம். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன், ஜெய்சங்கர் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
    இதையடுத்து, இருவரும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். நகராட்சி அலுவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மற்ற தொழிலாளர்களுக்கும் தெரிய வந்ததால், அவர்கள் அரசு தலைமை மருத்துவமனை எதிரே கூடினர். பின்னர் அவர்கள் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 
    அலுவலர்களை தாக்கியவரை உடனடியாகக் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர். 
    தகவலறிந்த கடலூர் புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 
    இதைத் தொடர்ந்து, துப்புரவுப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai