Enable Javscript for better performance
பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    
    shri-lord-perumal-1

    கடலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளில் முக்கியமானது பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியாகும். 
    வைகுண்ட ஏகாதசியன்று நடைபெறும் இந்த நிகழ்வு மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கருட ஸ்தலமாக சிறப்புப் பெற்ற கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பாவை சாற்றுமுறையும், 5 மணியளவில் ஸ்ரீதேவி } பூதேவி சமேதராக வரதராஜப்பெருமாள் எழுந்தருளி பரமபத வாசலிலிருந்து வெளிப்பட்டார். அப்போது பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா' என பக்தி முழக்கம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். பரமபத வாசலில் நம்மாழ்வார் எதிர்சேவையாற்றினார்.
    இதனைத் தொடர்ந்து, 
    ஸ்ரீ வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அம்பாளுடன் கோயிலை வலம் வந்தார். கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, தக்கார் ப.சுபத்ரா, தலைமை எழுத்தர் வி.ஆழ்வார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சனிக்கிழமை (டிச. 30) காலை 7 மணிக்கு தங்க கருட சேவையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
    அதேபோல, மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜப்பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில், பட்சிராஜன் கருடன் மீது அலங்கரிக்கப்பட்ட வரதராஜப்பெருமாள் பெருந்தேவி தாயாருடன் எழுந்தருளி சேவை சாதித்தார். 
    தொடர்ந்து சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.நடராசன், அறங்காவலர்கள் வேணுபாண்டுரங்கன், நாராயணன், கே.ரவி, எஸ்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    திட்டக்குடி ஸ்ரீ வேதாந்தவல்லி சமேத ஸ்ரீ சுகாசன பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல, திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், புதுப்பாளையம் பெருமாள் கோயில், மங்கலம்பேட்டை அருகே அமைந்துள்ள காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், வதிஷ்டபும், பெண்ணாடம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    சிதம்பரத்தில்...: சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே அமைந்துள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
    108 வைணவத் திருத்தலங்களில் 23}ஆவது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வெள்ளிக்
    கிழமை காலை தில்லை கோவிந்தராஜப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
    ஆண்டாள் அருளித்தந்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர், உற்வச மூர்த்தி பார்த்தசாரதி பெருமாள் பரமபத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, பூதேவி - தேவி, ஆண்டாள் சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
    நெய்வேலியில்...: இதேபோல, நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.
    பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலில் அதிகாலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. 
    இதேபோல, திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயில், பண்ருட்டி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
    குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.
    பண்ருட்டி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், கோயில் செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai