சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில்கூடுதலாக 11 "நீட்' நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள்

    By DIN  |   Published on : 31st December 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 11 "நீட்' நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், தற்போது 311 பேர் பயிற்சி பெற்று வருவதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தமிழக மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சியளிக்க மாநில அரசு முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக, போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் ஸ்பீடு என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்களை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இதில், முதல்கட்டமாக தொடங்கப்பட்ட 100 மையங்களில், கடலூர் மாவட்டத்தில் கடலூர் புனித வளனார் பள்ளி, வடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெண்ணாடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய 3 இடங்களில் இந்த பயிற்சி மையம் கடந்த 23-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
    இதில், கடலூரில் 83 பேரும், வடலூரில் 78 பேர், பெண்ணாடத்தில் 150 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது காலை, மாலை வேளைகளில் டீ, பிஸ்கெட் ஆகியவையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மையங்களில் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதாவது, சென்னையிலிருந்து வகுப்புகள் நடத்தப்படுவதை மாணவர்கள் இங்கிருந்து காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் கேள்விகளையும் கேட்கும் வகையிலும் ஆன்-லைன் வசதியும் செய்துதரப்பட்டுள்ளது.
    பயிற்சி மையங்கள் செயல்படும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அந்த மையத்துக்கு தலைமை வகிப்பதோடு, ஒவ்வோர் பாடப் பிரிவுக்கும் அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பாடம் தொடர்பாக விளக்கம் அளிப்பார்கள். அதன்படி தற்போது இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு நாளைக்கு 4 பாடங்களும் தலா ஒன்றரை மணி நேரம் நடத்தப்படுகிறது. 10 நிமிடம் இடைவெளி அளிக்கப்படுகிறது.
    மாவட்டத்தில் ஒவ்வோர் கல்வி ஒன்றியங்களிலும் தலா ஒரு பயிற்சி மையம் அமைக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களில் இந்த மையம் அமைக்கப்படுகிறது. தற்போது 3 மையங்கள் இயங்கிவரும் நிலையில் கூடுதலாக 11 மையங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையங்கள் ஜனவரி மாதத்திலிருந்து செயல்படும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக, ஒன்றியங்களுக்கு உள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்து, ஆன்-லைன் மூலமாக பெயர் பட்டியலை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து ஒப்புதல் பெறப்படுபவர்கள் பயிற்சி மையத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது தமிழ் வழியில் நடைபெறும் பயிற்சி மையத்தோடு, ஆங்கில வழியிலான பயிற்சி மையமும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    இந்தப் பயிற்சியானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai