சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் காணாமல்போன சிறுமிகள் உள்பட 299 பேர் நிகழாண்டில் மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்தார்.
  2017-ஆம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, மாவட்டக் காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, எஸ்பி செ.விஜயகுமார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டில் 275 திருட்டு வழக்குகளில் துப்பு துலங்கப்பட்டு ரூ.1.47 கோடி மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
  ரூ.3.11 கோடி அபராதம் வசூல்: மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 1,81,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.3.11 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்துதல், அதிகவேகத்தில் வாகனம் இயக்குதல் தொடர்பாக 3,333 பேரின் ஓட்டுநர் உரிமம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தல், மது கடத்தல், ரெளடியிசம் ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 66 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், 63 பேர் மீது குற்ற வரலாறு சீட்டு தொடங்கப்பட்டு அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
  299 பேர் மீட்பு: காணாமல்போன சிறுவர், சிறுமியரை மீட்கும் வகையில், "ஆபரேஷன் முஷ்கான்' இயக்கம் தொடங்கப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினர் 65 சிறுவர்கள், 17 சிறுமியரை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதேபோல பல்வேறு வழக்குகளில் காணாமல்போன 108 பெண்கள், 35 ஆண்கள், 58 சிறுமியர், 16 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
  1,558 வாகனங்கள் பறிமுதல்: மணல் கடத்தல் தொடர்பாக 1,179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 153 டிப்பர் லாரிகள், ஜேசிபி 10, டிராக்டர்கள் 75, மாட்டு வண்டிகள் 920 உள்பட மொத்தம் 1,558 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மது கடத்தலைத் தடுக்கும் வகையில் 4,978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 169 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு 4,989 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  நீதிமன்றம் மூலமாக 9,608 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. குற்ற வழக்குகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 6,258 பேரை பல்வேறு நீதிபதிகளின் விசாரணைகளுக்கு உள்படுத்தும் வகையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
  மேலும், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவற்றை மாவட்டத்தில் அமைதியான முறையில் கொண்டாடும் வகையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்பி தெரிவித்தார்.
  அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வேதரத்தினம் உடனிருந்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai