என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழில்சங்கக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு, சிஐடியூ அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு சிஐடியூ ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொருளாளர் என்.சண்முகம் தலைமை வகித்தார்.
தொமுச ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலர் கனக.பழனிவேல், ஸ்டாலின், பாட்டாளி தொழில்சங்க பொதுச் செயலர் முருகவேல், குப்புசாமி, ரவிச்சந்திரன், எல்எல்எப் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், சிவலிங்கம், செüந்தரராஜன், சிஐடியூ பொதுச் செயலர் டி.அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலர் பி.கருப்பையன் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச சம்பளம், பஞ்சப்படி மற்றும் போராடிப் பெற்ற ஊதிய உயர்வை சேர்த்து வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ஆம் தேதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு தலைமை அலுவலகத்தில் வேலைநிறுத்த அறிக்கை வழங்குவதென மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
சிஐடியூ ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சக்கரபாணி நன்றி கூறினார்.