திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கடைகள் அடைக்கப்பட்டதோடு, பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டது.
கருணாநிதி மறைவு குறித்த செய்தி பரவத் தொடங்கியதும் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், பெண்ணாடம், திட்டக்குடி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் வணிகர்கள் தங்களது கடைகளை அடைக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, தனியார் பேருந்துகள் தங்களது சேவையை நிறுத்திக்கொண்டு நிலையங்களுக்கு திரும்பின. இதனால், பேருந்து நிலையங்களில் காத்திருந்த பொதுமக்கள், அரசுப் பேருந்துகளில் சென்றனர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பயணிகளுக்கு பேருந்து வசதி செய்து தந்ததோடு, அருகிலுள்ள திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில் சேவைகள் குறித்த தகவல்களையும் வழங்கிக் கொண்டிருந்தனர். இதனால், ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பெட்ரோல் நிலையங்கள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பால் விற்பனை நிலையங்களிலும் அதிகமான மக்கள் கூடினர். இதனால், வியாபாரிகள் விற்பனையை விரைந்து முடித்துவிட்டு அவர்களும் கடைகளை அடைத்தனர்.
1,700 போலீஸார் பாதுகாப்பு: அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். மேலும், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள், தலைவர்களின் சிலைகள், கட்சி அலுவலகங்கள், முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஓர் உதவி கண்காணிப்பாளர், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 8 துணைக் கண்காணிப்பாளர்கள், 42 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள், சிறப்புப் படை காவலர்கள் 1,600 பேரும், பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் 50 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அலுவலகங்கள்: கருணாநிதி மறைவை அடுத்து கடலூர் நகர திமுக அலுவலகத்தில் கட்சிக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
கருணாநிதி உருவப் படம் அமைக்கப்பட்டு கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதேபோல அனைத்துப் பகுதிகளிலும் திமுக கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.