கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் 17 சங்கங்களுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் பதவியிடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. 4 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 572 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஏப்ரல் முதல் மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்குள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எனவே, 3, 4-ஆம் கட்டங்களில் நடத்தப்பட்ட தேர்தல் முடிவை அறிவிக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த தடை ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கெனவே தேர்தல் நடத்தப்பட்டபோது பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்படி, மாவட்டத்தில், நெய்வேலி நிலக்கரி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், மின்சார ஊழியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித் துறை பணியாளர் சங்கம், குழந்தைகள் நல அமைப்பாளர்கள் சங்கம் உள்பட 17 சங்கங்களின் வாக்கு எண்ணிக்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில், சில சங்கங்களுக்கு உடனடியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர்கள் மூலமாக வருகிற 11-ஆம் தேதி தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.