விருத்தாசலம் அருகே கிராம சாலை ஆக்கிரமிப்பைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள தீவளூர் கிராமத்திலிருந்து உச்சிமேடு வரையிலான 3 கி.மீ. தொலைவு மண்சாலை கிராம மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தச் சாலையை தீவளூர் மற்றும் உச்சிமேடு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். மேலும் புது உச்சிமேட்டில் இருந்து தீவளூர் மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் இந்த சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தச் சாலையின் நடுவே 300 மீட்டர் தூர பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தச் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 நாள் வேலைத் திட்டம் மூலம் பொதுமக்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு, சாலையோரத்தில் மரக் கன்றுகளை நடும் பணியிலும் ஈடுபட்டனர். இதையறிந்த ஆக்கிரமிப்பாளர் நூறு நாள் வேலைத் திட்ட பணியை தடுத்து நிறுத்தியதோடு, பணியாளர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாலையை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.