விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, ஜனநாயக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் விருத்தாசலத்தில் திங்கள்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.
கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் உளுந்து, மணிலா, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு தனியார் நிறுவனம் மூலமாக பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை வசூலிக்கப்பட்டது. அந்த ஆண்டில் கடுமையான வறட்சி நிலவியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டது.
ஆனால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தனியார் நிறுவனம் வழங்காததால் அதை வழங்க வலியுறுத்தி ஜனநாயக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமையில், விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை திங்கள்கிழமை ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், கோட்டாட்சியர் ச.சந்தோஷினி சந்திராவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், விவசாயத்தில் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர்.