கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 2 நாள்களில் 2,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன், போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு விபத்துக்களை தடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆக.4, 5-ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 86 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இரண்டு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தது தொடர்பாக 1,055 பேர் மீதும், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 775 , சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 297, செல்லிடப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 145, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 17, அதிக வேகத்தில் இயக்கியது 27, சாலை விதிகளை மீறியதாக 73, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்றதாக 14, இதர வழக்குகளாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.