மாட்டு வண்டிகள், டிராக்டர்களுக்கு மணல் வழங்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து வலியுறுத்தினர்.
கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரி தலைமையில் அந்தக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணியிடம் அளித்த மனு:
கடலூர் மாவட்டத்தில் மணல் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதால் அரசின் திட்டங்களான தொகுப்பு வீடுகள், பள்ளிக் கூடங்கள் கட்டும் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் வீடு கட்டவும், கட்டட பராமரிப்பு பணிகளைச் செய்திடவும் மணல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதனால், எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் சமூக அமைப்பு தேங்கியுள்ளது.
விவசாயத்துக்கு அடுத்து உழைக்கும் மக்கள் அதிகளவில் சார்ந்திருக்கும் கட்டுமானத் தொழில் மணல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கான உரிமையை உடனடியாக வழங்க வேண்டும். டிராக்டர்கள், லாரிகளுக்கு முறையான நடைமுறைகளை வகுத்து தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். செயற்கையான மணல் பற்றாக்குறையை ஏற்படுத்தி மறைமுகமாக அரசே லாபம் ஈட்டுவதை ஏற்க முடியாது. மக்களின் சொந்த உபயோகத்துக்காக மணலை பயன்படுத்துவது அவர்களது அடிப்படை உரிமை. எங்களின் கோரிக்கைகளை வருகிற 15-ஆம் தேதிக்குள் தீர்க்கவில்லையெனில் மணல் சத்தியாகிரஹம் நடத்துவோம் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஐ.மணிரத்தினம், மாவட்டத் தலைவர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், நகர்பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குமார், நெல்லிக்குப்பம் நகரத் தலைவர் திலகர், வட்டாரத் தலைவர்கள் சேரன், சீத்தாராமன், ராமச்சந்திரன், மாவட்டச் செயலர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.