வீராணம் ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 45.70 அடியாக இருந்தது. அடுத்த 3 நாள்களில் சென்னைக்கு குடிநீர் அனுப்ப வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரில் ஒரு பகுதி கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு அனுப்பப்பட்டு தேக்கப்படுகிறது. அண்மையில் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரால் கீழணை ஒரே நாளில் தனது முழுக் கொள்ளளவான 9 அடியை எட்டியது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் உச்ச நீர்மட்டம் 47.50 அடியாகும். மொத்த கொள்ளளவு 146.5 கோடி கன அடியாகும்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 45.70 அடியாக இருந்தது. அதாவது 102.7 கோடி கன அடி தண்ணீர் உள்ளது. வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் வருகிறது. இதே அளவு நீர்வரத்து தொடர்ந்தால் அடுத்த 3 நாள்களில் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டும் என்றும், ஏரி நிரம்பியவுடன் சென்னை குடிநீருக்கும், விவசாயப் பணிகளுக்கும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 1,300 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. கீழணையின் நீர்மட்டம் 8.50 அடியாக உள்ளது.