சோலா பாசி வளர்ப்பில் அதிக லாபம்: விவசாயிகள் ஆர்வம்

கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும் அசோலா பாசி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும் அசோலா பாசி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூரில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே அசோலா என்ற பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறது. நுண்தாவர வகையைச் சேர்ந்த அசோலாவில் கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் தேவையான தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, துத்தநாகம், மங்கனீஸ், வைட்டமின்கள், மணிச் சத்து, புரதச் சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்துடன் இந்தப் பாசிகளை கலந்து வழங்குவதால் கால்நடைகளின் எடை அதிகரிப்பு, கூடுதல் பால் உள்ளிட்ட பலன்கள் ஏற்படுவதாகவும், தீவனச் செலவும் மிகவும் குறைவதாகவும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் வேங்கடபதி, உதவிப் பேராசிரியர் பி.முரளி ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: எங்களது பல்கலைக்கழகம் சார்பில் அசோலா பாசி வளர்க்கவும், அதை கால்நடைகளுக்கு உணவாக வழங்கவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் ராமாபுரம், மேல்கவரப்பட்டு ஊராட்சிகளை தத்தெடுத்து, கால்நடை வளர்ப்போர் 100-க்கும் மேற்பட்டோருக்கு அசோலா பாசி வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பரிசோதனை முயற்சியாக அசோலா பாசி வளர்ப்போருக்கு இலவசமாக நாட்டு கோழி இனங்கள் வழங்கப்பட்டன. அவற்றுக்கு அசோலா பாசியை உணவாக வழங்கியதில் கோழிகள் அதிகளவில் முட்டையிட்டன. நோய் எதிர்ப்பு திறனும் கொண்டிருந்தன.
மேலும், அதிக எடையுடன் சுவைமிக்க கோழி இறைச்சியும் கிடைத்தது. வணிக ரீதியில் அசோலா பாசியால் நல்ல லாபம் கிடைத்து வருவதால் தற்போது கிராமங்களில் அசோலா பாசிகளையும், கோழிகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
கோழிப் பண்ணை வைத்திருப்போர் தங்களது கோழிகளுக்கு நாள்தோறும் ஒரு வேளை அசோலா பாசியை வழங்குவதால், நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை தீவனச் செலவு மிச்சமாகிறது. இதனால் அவர்களும் பாசி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல மாடுகளுக்கும் அசோலா பாசி வழங்கப்பட்டதில் ஒவ்வொரு வேளையும் கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு லிட்டர் பால் வழங்கின.
ஆடுகளும் நல்ல எடையுடன் வளர்ச்சி அடைந்தன. அவற்றின் இறைச்சி தனிச் சுவையுடன் அறியப்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்போர் அசோலா உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உற்பத்தி முறை: அசோலா பாசி உற்பத்தி முறை இலகுவானது, செலவில்லாதது. மரநிழல் உள்ள சுத்தமான இடத்தில் 6 அடி நீளம், 3 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட குழி அமைக்க வேண்டும்.
அதன் மேல் சில்பாலின் பாயை சீராக பரப்பிவிட்டு, 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும். குழியில் 10 செ.மீ. உயரத்துக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் 3 கிலோ புதிய சாணத்தை தண்ணீரில் கழுவி ஊற்ற வேண்டும். பின்னர் அதில் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து, குழியில் உள்ள தண்ணீரில் ஊற்ற வேண்டும். கடைசியாக 250 கிராம் முதல் 500 கிராம் வரை சுத்தமான அசோலா விதைகளை குழியில் இட வேண்டும். அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.
அடுத்த மூன்றே நாள்களில் அசோலா பாசி மூன்று மடங்காகப் பல்கிப் பெருகும். 15 நாள்களில் நல்ல வளர்ச்சியடையும். பின்னர் இதை அறுவடை செய்து உலர வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். மாடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும், ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரையிலும், கோழிகளுக்கு 20 கிராம் முதல் 30 கிராம் வரையிலும் கொடுக்கலாம். கூடுதல் லாபம் கிடைப்பதால் அசோலா பாசி வளர்ப்பில் விவசாயிகள்அதிக ஆர்வம் காட்டுவதாக அவர்கள் கூறினர்.
- ச. முத்துக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com