பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திப் பூங்காவால் தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி பெறும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திப் பூங்காவால் தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி பெறும் என மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திப் பூங்காவால் தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி பெறும் என மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடலூர் மாவட்ட அளவிலான சிறப்பு நோக்குக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  பங்கேற்று, கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 2-ஆவது முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 
இதை சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனங்களும், இந்திய அரசின் ஆய்வு அமைப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 
அதேபோல, உள்கட்டமைப்பு, மின் வசதி, அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பது ஆகியவற்றிலும் முதலிடம் வகிக்கிறது. அதிக வேலைவாய்ப்பு அளிப்பது, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் 
2-ஆவது மாநிலமாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்காக, மத்திய அரசிடமிருந்து விருதும் பெற்றுள்ளோம்.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ஈடாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஏனெனில், அந்த நிறுவனங்களால்தான் அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த மாநாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார்களை 2019-ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.
மத்திய அரசின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திப் பூங்கா தமிழகத்தில் அமைய உள்ளது. இது அமையப் பெற்றால் தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி பெறும். 
அதற்கான கொள்கைகள் அரசால் வகுக்கப்படும். உள்ளீட்டு வரி மானியம் வழங்குவது தொடர்பாக சிறு, குறு, நடுத்தர முதலீட்டாளர்கள் வைத்துள்ள கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்றார் எம்.சி.சம்பத்.
கடலூர் மாவட்ட அளவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், தொழில் வணிகத் துறை இணை இயக்குநர் (உற்பத்திக் கணக்கு) கே.எஸ்.தீனதயாளன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் சிட்கோ கிளை மேலாளர் ஆர்.செல்வகுமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் கி.ஜனார்த்தனன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பெ.ஜோதிமணி, குறு, சிறு தொழில்நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் சே.அசோக் ஆகியோர் பேசினர். முன்னதாக, மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் ச.சொக்கலிங்கம் வரவேற்றார். திட்ட மேலாளர் ஆ.லட்சுமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com