வடலூர் தைப்பூசம்: திரளான பக்தர்கள் ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு, புதன்கிழமை ஏழு திரைகளை நீக்கி 6 காலங்களில் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு, புதன்கிழமை ஏழு திரைகளை நீக்கி 6 காலங்களில் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதில், மூன்று அமைச்சர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.
 வடலூர் சத்திய ஞான சபையில் 147-ஆவது தைப்பூச ஜோதி தரிசன விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை காலை 6 மணி அளவில் முதல் கால ஜோதி தரிசனம் ஏழு திரைகளை நீக்கி காட்டப்பட்டது. ஜோதி தரிசனத்தைக் காண திரண்டிருந்த பக்தர்கள் "அருள்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என்ற மந்திரத்தை முழங்கியபடி ஜோதி தரிசனம் செய்தனர்.
 இந்த நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன், உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சார் - ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரா.ஞானசேகரன், உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10, பிற்பகல் 1, இரவு 7, 10 மணி அளவில் ஏழு திரைகளை நீக்கி 5 கால ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
 தொடர்ந்து, வியாழக்கிழமை (பிப். 1) காலை 5.30 மணி அளவில் 6-ஆவது கால ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
 தைப்பூச விழாவையொட்டி, வடலூர் தருமசாலை பிரசங்க மேடையில் ஊரன் அடிகளார் தலைமையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது.
 "அன்னதானமே அருள்தானம்', "அன்பே அருள்பெருஞ்ஜோதி', "தைப்பூசம்', "ஜீவகாருண்யம்' உள்ளிட்ட தலைப்புகளில் சொற்பொழிவாற்றினர். மாலை 6 மணி அளவில் மகாமந்திரம் ஓதுதல், சுத்த சன்மார்க்க வழிபாடு அகியவை நடைபெற்றன.
 தைப்பூச விழாவை முன்னிட்டு, ஜோதி தரிசனத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
 நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 ஜோதி தரிசனம் காண வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், வள்ளலார் தெய்வ நிலையம் ஆகியவை சார்பில் செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (பிப். 2) பகல் 12 முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் அருள்பெருஞ்ஜோதியாகிய மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருவறை தரிசனம் நடைபெறுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com