Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
    திட்டக்குடி அருகே உள்ளது கீழ்ச்செருவாய் ஊராட்சி. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் காலை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதையும் முறையாக விநியோகம் செய்யவில்லையாம். 
    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கடந்த இரு நாள்களாக முழுமையாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லையாம். 
    எனவே, தண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும் திரளான பெண்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்களூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பெரியசாமி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊராட்சியின் குடிநீர் குழாயில் துளைபோட்டு தண்ணீர் திருடப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். 
    குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும்,  அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இதுதொடர்பாக தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுமெனவும் பெரியசாமி கூறினார். 
    மேலும், உடனடியாக தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai