எரிவாயு உருளை விநியோகத்துக்கு கட்டணம் நிர்ணயம்
By கடலூர், | Published on : 14th July 2018 08:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
எரிவாயு உருளை விநியோகம் செய்வதற்கு கட்டணம் நிர்ணயம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 7.25 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சமையல் தேவைக்காக எரிவாயு அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு உருளைகளை சம்பந்தப்பட்ட முகவர்களிடமிருந்து பெற்று வீடுகளுக்கு விநியோகம் செய்பவர்கள் கூடுதலாக பணம் கேட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நுகர்வோர் கூட்டங்களிலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு அதற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, எரிவாயு உருளைகளை விநியோகம் செய்வதற்கான கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளைக்கான நிலையான போக்குவரத்துக் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஆணையிடப்படுகிறது.
அதன்படி, எரிவாயு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கிலிருந்து பயனாளியின் வீடு வரையிலான 5 கி.மீ. தொலைவுக்கு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டும். 5 கிலோ மீட்டருக்கு
மேல் 10 கிலோ மீட்டர் வரை கி.மீ.க்கு ரூ.1.50-ம், 10 கி.மீ.க்கு மேல் 20 கி.மீ. வரை கி.மீ.க்கு ரூ.2-ம், 20 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.2.50-ம் கட்டணமாக அளிக்கப்பட வேண்டும். இந்தக் கட்டணத்தை கடலூர் மாவட்டத்திலுள்ள எரிவாயு முகவர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அதில் உத்தரவிட்டுள்ளார்.
எரிவாயு உருளை விநியோகத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை நுகர்வோர் அமைப்புகள் வரவேற்றுள்ளபோதிலும், அரசு வகுத்த விதிமுறைகளை சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.