சுடச்சுட

  

  அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை: நகராட்சி மீது பொதுமக்கள் புகார்

  By  நெய்வேலி,  |   Published on : 14th June 2018 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி நகராட்சி, 11-ஆவது வார்டு, சேர்மன் அ.மணிநகர் பகுதியில் 24 ஆண்டுகள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என அந்தப் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
   இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இந்த நகர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இருப்பினும், கடந்த 24 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெரு விளக்கு அமைத்தல், துப்புரவுப் பணி, கழிவு நீர் வாய்க்கால் என எந்த வசதியும் செய்து கொடுக்காமல் நகராட்சி அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் கூறினர்.
   இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சொ.காளிதாசன் கூறியதாவது: பண்ருட்டி நகராட்சி, 11-ஆவது வார்டில் சேர்மன் அ.மணிநகர் அமைந்துள்ளது. இந்த நகர் கடந்த 1994-ஆம் ஆண்டு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. 24 ஆண்டுகள் கடந்த நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
   இதுகுறித்து, 3.4.2018-இல் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுவை பரிசீலித்த ஆட்சியர், 11-ஆவது வார்டு பகுதியை ஆய்வு செய்து விரிவான அறிக்கை அனுப்புமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு 4 மாதங்கள் ஆகியும் இதுநாள் வரையில் எந்தப் பணியும் நடைபெறவில்லை.
   எனவே, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சாலை மறியல், நகராட்சிக்கு பூட்டுப் போடுதல், குப்பைக் கொட்டுதல் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார் அவர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் பி.ஏகராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்தான் நான் பொறுப்பேற்றுள்ளேன். இந்தப் புகார் மனுவின் மீது ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai