சுடச்சுட

  

  அரசு மருத்துவமனைகளில் மாணவி, பெண் சாவு: சுகாதாரத் துறை உயரதிகாரி விளக்கம்

  By  கடலூர்  |   Published on : 14th June 2018 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மாணவி, பெண் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால் புதன்கிழமை விளக்கமளித்தார்.
   விருத்தாசலத்தை அடுத்த சு.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் மகாலட்சுமி (13). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படித்து வந்தார்.
   கடந்த 7 -ஆம் தேதி பள்ளியில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், மாணவி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
   அதே போல, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் வனரோஜா (17). இவர், உளுந்தூர்பேட்டையில் உள்ள அவரது அத்தை வீட்டில் வசித்து வந்தார்.
   இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக மங்கலம்பேட்டை அரசு மருத்துமனைக்கு வந்திருந்த நிலையில், மருத்துவர், செவிலியர்கள் இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்ததில் வனரோஜா மயங்கி விழுந்து அங்கேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால் கூறியதாவது:
   மாணவி மகாலட்சுமி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். அவருக்கு கடந்த 2016- ஆம் ஆண்டு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
   இந்த நிலையில், பள்ளியில் மயங்கி விழுந்த அவரை காலை 8.40-க்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த செவிலியர்கள் மாணவி இறந்துவிட்டதை உறுதி செய்ததுடன், இதுகுறித்து மருத்துவருக்குத் தகவல் அளித்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் 4 மணி வரை மட்டுமே. எனவே, இந்தச் சம்பவத்தில் மருத்துவர் பணியில் இல்லை என்று கூறப்படும் புகாரை ஏற்க முடியாது.
   கடலூர் மாவட்டத்தில் 180 பேருக்கு பிறவியிலேயே இருதயக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களில் 125 பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 185 மருத்துவர்களே உள்ள நிலையில், 24 மருத்துவர்கள் உயர்படிப்புக்கும், 15 பேர் மருத்துவம், பிரசவ விடுப்பிலும் சென்றுள்ளனர். எனினும், இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு சேவையளித்து வருகிறோம்.
   அதேபோல, மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் இறந்த வனரோஜா உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறார். அவர், காசநோய்க்காக தொடர் சிகிச்சைப் பெற்று வருவது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரை மூலமாகத் தெரிய வந்தது. அவர் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து அங்குள்ள காத்திருப்போர் அறையிலேயே இருந்துள்ளார். வனரோஜாவை அங்கே விட்டுவிட்டு அவரது உறவினர் வெளியே சென்றுள்ளார். மருத்துவரை சந்திக்காமலே அவரது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai