சுடச்சுட

  

  கடலூரில் பணியாற்றி வரும் ஆயுதப்படை பெண் காவலர் புதன்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
   கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சவிதா (27). இவரது கணவர் சத்தியசீலன் (35). இருவரும் கடலூர் ஆயுதப் படை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
   இந்த நிலையில், புதன்கிழமை காலை தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் மயங்கிக் கிடந்த சவிதாவைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
   தற்கொலைக்கு முயல்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் சிக்கியதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அந்தக் கடிதத்தில், தனது இரு பெண் குழந்தைகளைக் கவனித்து வந்த சவிதா, தனக்கு அலுவல் பணி தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டதால், அவருக்கு காவல் துறையின் வானொலி தகவல் பிரிவில் பணி வழங்கப்பட்டதாகவும், அவ்வப்போது பிற பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டதாகவும், விடுப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயுதப் படையின் ஆய்வாளர் சிவசங்கரன் அவரைத் திட்டியதுடன், புதன்கிழமை காலையில் அவரை நீதிமன்றப் பணியில் ஈடுபடுமாறு கடிதம் வழங்கியதாகவும் தெரிகிறது. குறிப்பாக, கலப்பு திருமணம் செய்து கொண்டதால் கணவரின் சாதி குறித்து கூறி திட்டுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
   இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
   இந்தச் சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் சிவசங்கரன் கூறியதாவது: நீதிமன்றப் பாதுகாப்புப் பணி புதன்கிழமை வழங்கப்பட்ட நிலையில், அதற்கான உத்தரவு நகலை பெற்றவர் பணிக்குச் செல்லவில்லை. அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. ஆயுதப் படையில் பெண் போலீஸாருக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்படும். அதுபோலவே சவிதாவுக்கும் பணி ஒதுக்கப்பட்டது. அவர், ஏற்கெனவே 3 முறை குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றார் அவர்.
   ஐஜி ஸ்ரீதர் விளக்கம்: அலுவல் பணியாக கடலூர் வந்திருந்த வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் சி.ஸ்ரீதரிடம் இதுகுறித்து கேட்டபோது, காவல் துறையில் பொறுப்புகளும், பணிச் சுமையும் அதிகம். தேவைப்படுவோருக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க தனியாக சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai