சுடச்சுட

  

  தேவனாம்பட்டினம் - சோனங்குப்பம் மீனவ கிராம மக்களிடம் கருத்துக் கேட்பு

  By  கடலூர்,  |   Published on : 14th June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேவனாம்பட்டினம் - சோனங்குப்பம் மீனவ கிராம மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   மீன்களின் இனப் பெருக்கக் காலத்தையொட்டி, கடலூர் மாவட்ட பகுதி வங்கக் கடலில் 61 நாள்கள் மீன்பிடித் தடைக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தடைக் காலம் வியாழக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
   முன்னதாக, கடலில் மீன்பிடிக்க பயன்படுத்தும் வலை தொடர்பாக தேவனாம்பட்டினம் - சோனங்குப்பம் மீனவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். போலீஸாரின் கைது நடவடிக்கை, தேடுதல் வேட்டை காரணமாக மீனவர் கிராமத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை.
   இந்த நிலையில், தடைக் காலத்தின் முடிவுக்குப் பின்னர் இரு கிராமத்தினரும் சுமுகமாக மீன் பிடி தொழிலை மேற்கொள்ளவும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும் கடலூர் சார் ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.
   அதன்படி, கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரு மீனவ கிராம பிரதிநிதிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சார் ஆட்சியர் தலைமையில், மீன்வளத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
   தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பெரு.ஏகாம்பரம், குப்புராஜ், ஜெயபால், ராஜீவ்குமார், சோனங்குப்பத்தைச் சேர்ந்த தங்கமணி, அரிகிருஷ்ணன், சக்திவேல், சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
   இரு மீனவர் கிராம பிரதிநிதிகளிடம் சார் ஆட்சியர் தனித் தனியே கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது, சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு இல்லாமல், இனி எவ்வித பிரச்னைகளும் ஏற்படாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இரு கிராம பிரதிநிதிகளும் உறுதியளித்தனர். மேலும், இரு கிராம மீனவர்களின் மீன்பிடித் தொழில் கோரிக்கைகள் தொடர்பாக மீன்வளத் துறை உதவி இயக்குநர் தலைமையில் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
   மேலும், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஆட்சியர் தலைமையிலும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai