சுடச்சுட

  

  பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு 25,324 வீடுகள்

  By  கடலூர்,  |   Published on : 14th June 2018 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ. 2.10 லட்சம் மானியத்துடன் 25,324 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
   குடிசை வீடுகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் எனத் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
   அதன்படி, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கான நகர்ப்புற குடிசை மாற்று வாரியம் கடலூரில் செயல்பட்டு வருகிறது.
   இந்தத் திட்டம் குறித்து புதன்கிழமை அதன் நிர்வாகப் பொறியாளர் எஸ்.எட்வின்சாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   பிரதமர் வீடு கட்டும் திட்டம் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. கடலூர் நகராட்சியில் 6,462 வீடுகளுக்கும், சிதம்பரத்தில் 701, விருத்தாசலத்தில் 1,610, நெல்லிக்குப்பத்தில் 2,416 வீடுகள் கட்ட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சிக்கு 3,828, திண்டிவனம் 900, கள்ளக்குறிச்சி 716 வீடுகளும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகராட்சிக்கு 346, மன்னார்குடி 575, கூத்தாநல்லூர் 1,275 வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் 414, திருத்துறைப்பூண்டி 1,190, வேதாரண்யம் 1,082, மயிலாடுதுறை 1,224, சீர்காழி 960 வீடுகளும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
   வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் ஒதுக்கீடு பெறப்பட்ட 25 ஆயிரம் வீடுகளையும் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
   நகராட்சிப் பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 300 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. அவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ரூ. 1.50 லட்சமும், மாநில அரசின் சார்பில் ரூ. 60 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும். சொந்த இடம் உள்ளவர்கள், நகராட்சிப் பகுதியில் வேறு வீடு இல்லாதவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். ரூ. 2.10 லட்சம் மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
   இதுவரை சுமார் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன
   ரூ. 22 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் தோறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த உள்ளோம். முதல் கட்டமாக திருவாரூரில் இந்த முகாம் விரைவில் நடத்தப்படும்.
   நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளது. எனவே, பயன்பெற விரும்புவோர் கடலூரிலுள்ள குடிசை மாற்று வாரியத்திடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்காக 16 நகராட்சிகளிலும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai