Enable Javscript for better performance
உழவர் மன்றத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத்தினர் கண்களில் கருப்புத் துணி கட்டி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    இந்த மன்றத்தின் சிறப்புக் கூட்டம், மன்ற உறுப்பினர் ஜோதி தலைமையில் அயன்குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. உறுப்பினர்கள் சாரங்கம், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 6 வார காலக்கெடு முடிந்தும் மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது, அலட்சியமாக செயல்பட்ட தமிழக அரசைக் கண்டிப்பது, இந்தப் பிரச்னையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் தனித் தனியாக போராட்டம் செய்வதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். 
     கூட்ட முடிவில், காவிரி பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ஊழவர் மன்றத்தினர் தங்களது கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலர் பாலமுருகன் தலைமையில், அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அமைப்புச் செயலர்  குமரவேல் தலைமையில் 6 பேர் வடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லிடப்பேசி  கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். 
     பாமக சார்பில் மாநில உழவர் பேரியக்க துணைத் தலைவர் து.அ.கணபதி தலைமையில், ஒன்றியச் செயலர்கள் பாலு, பன்னீர்செல்வம், பிரேம்குமார், செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர், பைத்தாம்பாடி, அவியனூர், காவனூர், உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் பா.ம.க.வினரின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai