Enable Javscript for better performance
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வு  ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டருக்கு முந்தைய 40 நாள்களை கிறிஸ்தவர்கள் தவக் காலமாக கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி, 40 நாள் தவக்காலம் கடந்த பிப்.14-ஆம் தேதி சாம்பல் புதனாக கடைப்பிடிக்கப்பட்டு, கடைசி வாரம் பெரியவாரமாக கடைப்பிடிக்கப்பட்டது. 
    பெரியவாரத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தினமும் பாடல் ஆராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை பெரிய வியாழனாகக் கடைப்பிடிக்கப்பட்டு இயேசு தனது சீடர்களின் பாதத்தைக் கழுவும் நிகழ்வு தேவாலயங்களில் நடைபெற்றது. 
    வெள்ளிக்கிழமை சிலுவைப் பாதையாகக் கடைப்பிடிக்கப்பட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
    இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததை நினைவுக்கூரும் வகையில் தேவாலயங்களில் பாதிரியார்கள் சிலுவையைச் சுமந்துச் சென்றனர். அப்போது, கிறிஸ்தவர்கள் 7 வசனங்களைப் பாடியபடி பின்தொடர்ந்தனர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர் நீத்ததைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அதனை துக்க நிகழ்வாக கடைப்பிடித்தனர். 
    சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ஆம் நாளில் உயிர்த்தெழும் நிகழ்வாக ஏப்.1-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
    மாவட்டம் முழுவதும் அனைத்து ஆர்.சி, சி.எஸ்.ஐ., ஏ.எல்.சி. தேவாலயங்களில் சிலுவை வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    நெய்வேலி: இதேபோல, நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நெய்வேலி வட்டம் 24-இல் உள்ள காணிக்கை மாதா ஆலயத்தில் பங்கு தந்தை ரட்சகர் அடிகளார் சிலுவை சுமந்தபடி செல்ல, சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல, வட்டம் 20-இல் உள்ள உலக ரட்சகர் ஆலயத்தில் ஆரோக்கிய ஆனந்தராஜ், வட்டம் 4-இல் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் நிர்மல் ராஜ்,   பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை மரிய ஆனந்தராஜ் ஆகியோர் சிலுவையை சுமந்தபடி சிலுவைப் பாதை பவனி சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai