Enable Javscript for better performance
சிவன், முருகன் கோயில்களில் பங்குனி உத்திரப் பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    குலதெய்வ வழிபாட்டுக்கான முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பங்குனி உத்திரப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குலதெய்வ வழிபாடு போல முருகப் பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் முருகன் சந்நிதி இடம் பெற்றுள்ள சிவன் கோயில்களில் இந்தத் திருவிழா வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 
    கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலையில் உத்திராபாத கோபுர தரிசனம், 108 சங்கு பூஜை, மகா அபிஷேகம், யாகசாலை, கலச பூஜை அபிஷேகம், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கோயிலில் பெரியநாயகி உடனுறை பாடலீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தனி சந்நிதி கொண்ட முருகனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. கடலூர் வில்வநகர் முருகன் கோயிலுக்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
    இதேபோல, கடலூர் புதுக்குப்பத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில், கடலூர் முதுநகர் புருகீஸ் பேட்டையில் உள்ள சுப்பிரமணியர் கோயில், கடலூர் உண்ணாமலைசெட்டி சாவடியில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோயில்களில் பக்தர்கள் திரளானோர் காவடி எடுத்தும், அலகிட்டும், பால்குடம் சுமந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். 
     திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை முத்தையா சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    நெய்வேலி: நெய்வேலியில் உள்ள வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா என்எல்சி நிர்வாகத்தால்  சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. விழாவின் 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் நடைபெற்றது. இதையொட்டி நெய்வேலி வட்டம் 18-இல் உள்ள பிள்ளையார் கோயில், வட்டம் 27-இல் உள்ள பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடங்களை சுமந்து வந்து, வேலுடையான்பட்டு கோயிலில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 
    பெண்கள் சுமந்து வந்த பால்குடங்களில் இருந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். 
    காவல் துறையினர், பாதுகாப்புப் படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு தன்னார்வ அமைப்பினர் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கினர். விழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
    இதேபோல, பண்ருட்டி லிங்க் ரோடு முருகன் கோயில், வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, தொரப்பாடியில் உள்ள குமரன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு, காவடி ஊர்வலம் நடைபெற்றது. பலர் உடலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவு தெப்பத் திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai