Enable Javscript for better performance
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 13 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் மீனவ கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
     கடலில் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் வலை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால் கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே கடந்த செவ்வாய்க்கிழமை கடலில் மோதல் ஏற்பட்டது.
     இதுதொடர்பாக தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயுதங்களுடன் சோனாங்குப்பத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில், அதிமுக வார்டு செயலர் க.பஞ்சநாதன் (65) குத்திக் கொல்லப்பட்டார்.
     அதேப் பகுதியைச் சேர்ந்த கா.பாண்டியன் (58), செல்வம் மனைவி ஏலாயி (45), பன்னீர்செல்வம் மனைவி முனியம்மாள் (45) ஆகியோர் காயமடைந்தனர்.
     சம்பவம் தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிந்து, தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த த.ஆறுமுகம் (41), பி.ஓசைமணி (39), ம.சுதாகர் (46), நா.ஆறுமுகம் (46), சு.தினகரன் (59), ச.சரண்ராஜ் (30), த.தென்னரசு (32), ரா.சுந்தர் (43) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
     இந்த நிலையில், ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்துக்குள் நுழைந்தவர்களை தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மறித்துள்ளார். அப்போது, அவரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த ம.மாரிராஜா (39), மு.ராஜவேல் (30), மு.ராஜசேகரன் (32), ராஜ.தெய்வசிகாமணி, த.ராஜலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
     மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான கா.பாண்டியன் அளித்த மற்றொரு புகாரின் பேரில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் மீது கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     மோதல் சம்பவத்தையொட்டி, இரு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai