குண்டும், குழியுமான சிதம்பரம் நகரச் சாலைகள் 

சிதம்பரம் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவரச் செப்பனிடப்படாமல் மழையால் மோசமாக சேதமடைந்துள்ளன. 

சிதம்பரம் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவரச் செப்பனிடப்படாமல் மழையால் மோசமாக சேதமடைந்துள்ளன. 

கடலூர் மாவட்டத்தில் முதலாவதாக  சிதம்பரம் நகரில் 1962-ஆம் ஆண்டு புதை சாக்கடைத் திட்டப் பணிகள் ரூ.25 லட்சத்தில் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு 16-4-1969 அன்று சிதம்பரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. புதை சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டதால், பல்வேறு இடங்களில் கழிவுநீர் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டது. புதை சாக்கடை குழாயில் ஆங்காங்கே உடைப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து 2008-ஆம் ஆண்டு செப்.9-ஆம் தேதி "தினமணி'யில் செய்தி வெளியானது. 

இதன் எதிரொலியாக அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.
ஸ்டாலின், சிதம்பரம் நகர புதை வடிகால் விரிவாக்க திட்டத்துக்கு ரூ.44  கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். ஆனால், இந்தத் திட்டத்துக்கு நிதிஒதுக்கீடு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் டெண்டர் விடப்பாடமல் பணி கிடப்பில் போடப்பட்டது. 

தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் மீண்டும் வரையறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நிதி போதாததால் கூடுதலாக ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, திட்டப் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சிதம்பரம் நகரில் 4 மண்டலங்களாக தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

புதை சாக்கடைத் திட்டத்துக்காக குழாய்கள் பதிப்பதற்கும், தொட்டிகள் கட்டுவதற்கும் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாததால் குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. 

புதை சாக்கடை திட்டத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து மூதாட்டி ஒருவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார். இதேபோல இளைஞர் ஒருவர் புதை சாக்கடை திட்ட குழியில் விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் சிதம்பரம் நகரச் சாலைகளில் மழைநீர் தேங்கி குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு, சிதம்பரம் நகரச் சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சமப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என சிதம்பரம் நகர மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுரேந்திரஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கடலூர் நிர்வாகப் பொறியாளரின் கீழ் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஒவ்வொரு பகுதியிலும் பணி முடிந்தவுடன் சாலைகளை செப்பணியிட்டு சரி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் சாலைப் பள்ளங்கள் சரியாக மூடப்படாததால், நகராட்சி நிர்வாகத்துக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. 

நகரில் உள்ள 33 வார்டுகளில் அனைத்து சாலைகளையும் சீரமைக்க ரூ.5 கோடி நிதி கோரப்பட்டு பெறப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடி நிதி கேட்டுள்ளோம். 3 சாலைகளில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

புதை சாக்கடை திட்டப் பணிகள் முடிவுற்று குடிநீர் வடிகால் வாரியத்தினர் சாலைகளை எங்களிடம் ஒப்படைத்தவுடன் அனைத்து சாலைகளும் புதிதாக அமைக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com