நகராட்சி வளர்ச்சிப் பணிகள்: நிர்வாக இயக்குநர் ஆய்வு

கடலூர்,  பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

கடலூர்,  பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
முதலில், கடலூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு  வரும்  வளர்ச்சிப் பணிகள், கணக்குகள் தொடர்பாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஆய்வு நடத்தினார். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், சார்-ஆட்சியர்கள் கே.எம்.சரயு, விசு.மகாஜன், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், நகராட்சி பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, நகராட்சியின் கணக்குகளையும், திட்டப் பணிகளையும் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
 பின்னர், கடலூர் நகராட்சியில் ரூ.42 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி, அம்ருத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பூங்கா, நகராட்சி புதிய கட்டடம் ஆகியவற்றை கள ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடலூர் நகராட்சியில் ரூ.42 கோடியில் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அடுத்த 10 மாதங்களில் முடிவடையும். 
நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிக்காக 136 பேர் நியமிக்கப்பட்டு ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் ஜனவரி-நவம்பர் வரையிலான காலத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த ஆண்டில் 300 பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தனர். 
நகராட்சியின் சம்பள பாக்கி மற்ற தேவைகளுக்காக ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 45 வார்டுகள் கொண்ட நகராட்சியில் 35 துப்புரவு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நகராட்சியில் உள்ள 58 பூங்காக்களில் குப்பை சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்படும். அதில் குப்பைகளை மக்கச் செய்து உரமாக்கி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
 இந்தத் திட்டத்தில் இதுவரை 10 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ஒரு மாதத்தில் கட்டி முடிக்கப்படும். நகராட்சிக்கு ஒரு நாளைக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 40 லட்சம் லிட்டரே விநியோகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக குடிநீர் வழங்கல் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றார் அவர்.
 ஆய்வின்போது கடலூர் நகராட்சி ஆணையர் (பொ) கே.பாலு, நகராட்சி பொறியாளர் ராமசாமி, உதவிப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை (நவ.10) சிதம்பரம், விருத்தாசலம் நகராட்சிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com