பண்ருட்டியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் திடீர் நிறுத்தம்

பண்ருட்டியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், திடீரென தேர்தல் நிறுத்தப்பட்டது.

பண்ருட்டியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், திடீரென தேர்தல் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எம்எல்ஏ ஆதரவாளர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். 
 பண்ருட்டி, விழமங்கலத்தில் பண்ருட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் 8 இயக்குநர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
இதில் போட்டியிட அதிமுக, திமுகவினர் தலா 2 கோஷ்டிகளாகவும், அ.ம.மு.க.வினரும் மனு தாக்கல் செய்தனர்.தேர்தலில் 44 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப் பதிவு, பண்ருட்டியில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
 தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா சேகர் தலைமையில் 7 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. சங்க உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், திமுவினர் இந்தத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாகவும் கூறினர். மேலும், தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். இதேபோல, மாநில தொழில் துறை அமைச்சர் 
எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களும் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனவும், கடந்த முறை இயக்குநராக இருந்தவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனவும் கூறி தேர்தலைப் புறக்கணித்தனர்.
இருப்பினும், வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பகல் 12 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா சேகர் தேர்தலை நிறுத்துவதாக அறிவித்தார். அதற்கான அறிவிப்பு வாக்குச் சாவடி அறைக் கதவில் ஒட்டப்பட்டது. அதில், தேர்தலில் கலகம், வன்முறை நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க விதி எண் 52/18-கீழ் தேர்தலை தொடர்ந்து நடத்த இயலாத சூழலில் தள்ளி வைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாக்குச் சாவடி முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலை தொடர்ந்து நடத்த வேண்டும். அல்லது பாதிவான வாக்குகளை மட்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 பின்னர், வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டு பெட்டிகள் முத்திரையிடப்பட்டன. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். வாக்குப் பதிவின்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடு
படுத்தப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com