சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெய்வேலி பகுதியில் வருவாய்த் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினர்.

நெய்வேலி பகுதியில் வருவாய்த் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினர்.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் திருச்சி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. வடக்குத்து ஊராட்சி இந்திராநகர் பகுதியில், இந்த நிறுவனத்துக்கான ஆர்ச்-கேட் அமைந்துள்ளது. இந்தப் பகுதி சாலையில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், சாலையின் இருபுறமும் தரைக் கடைகள், இறைச்சிக் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆர்ச்-கேட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் குறிஞ்சிப்பாடி மண்டல துணை வட்டாட்சியர் செல்வி, நெய்வேலி நகரிய காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். அந்தப் பகுதியிலிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள், இறைச்சிக் கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.
மேலும், உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிறுவனம், அரசியல் கட்சி, தனி நபர்களின் விளம்பர பதாகைகளையும் வருவாய்த் துறையினர் அகற்றினர். இந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் இணைந்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com