மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.18.27 கோடி மானியக் கடன் விநியோகம்: மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மானியத்துடன் கூடிய கடனாக ரூ.18.27 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மானியத்துடன் கூடிய கடனாக ரூ.18.27 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 கடலூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலமாக புதிய தொழில் முனைவோர் மற்றும் மாநில அரசின் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (நீட்ஸ்) பட்டம், பட்டயம், தொழில்கல்வி முடித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு, உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுக்கு வழிவகை செய்யப்படுகிறது.
 இதில், நிலம், கட்டடம் மற்றும் இயந்திர தளவாடங்களுக்கு மானியம் 25 சதவீதம் வரை, அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
 இந்தத் திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதும், சிறப்பு பிரிவினருக்கு 21 முதல் 45 வயது வரை இருக்கலாம். கடந்த 6 ஆண்டுகளில் (2012-18) இந்தத் திட்டத்தில் 89 பயனாளிகளுக்கு ரூ.6.69 கோடி மானியத் தொகையுடன் கூடிய கடனாக வழங்கப்பட்டுள்ளது.
 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் மாநில அரசின் திட்டத்தின்கீழ் (யு.ஒய்.இ.ஜி.பி.) உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை, சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரை, வியாபாரத் தொழில்களுக்கு ரூ.ஒரு லட்சம் வரையிலும் வங்கிக் கடனுக்கு வழிவகை செய்யப்படுகிறது. மானியம் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படுகிறது.
 இந்தத் திட்டத்தில் பயன்பெற கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 35, சிறப்பு பிரிவினருக்கு 45 வயது வரை இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 இந்தத் திட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் (2011-18) ஆயிரத்து 113 பயனாளிகளுக்கு ரூ.6.09 கோடி மானியத் தொகையுடன் கூடிய கடனாக வழங்கப்பட்டுள்ளது.
 பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் (பிஎம்இஜிபி) (மத்திய அரசு திட்டம்) உற்பத்தி ரக தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவைத் தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் வங்கிக் கடனுக்கு வழிவகை செய்யப்படுகிறது.
 பொது பிரிவினருக்கு நகரப் பகுதியில் தொடங்கும் தொழில்களுக்கு 15 சதவீதமும், ஊரகப் பகுதியில் தொடங்கும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது.
 அதே நேரத்தில் சிறப்புப் பிரிவினருக்கு முறையே 25, 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் (2011-17) 164 பயனாளிகளுக்கு மானியத் தொகையுடன் கூடிய கடனாக ரூ.5.49 கோடி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com