கம்பு விளைச்சல் போட்டிக்கு அறுவடை

கடலூர் மாவட்ட அளவில் கம்பு  விளைச்சல் போட்டிக்கான அறுவடை பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

கடலூர் மாவட்ட அளவில் கம்பு  விளைச்சல் போட்டிக்கான அறுவடை பணி தற்போது நடைபெற்று வருகிறது. 
வேளாண்மைத் துறை சார்பில் ஒவ்வொரு பசலி ஆண்டும் மாவட்ட அளவிலான நெல், கம்பு, மணிலா பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி, வேளாண்மை துறை அலுவலகத்தில் நுழைவுக் கட்டணமாக ரூ.140 செலுத்தி இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். 
போட்டியின் முடிவில் தரமான பயிர் விளைச்சல், அதிக மகசூல் ஈட்டிய விவசாயி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். 
அதன்படி நிகழாண்டு கம்பு விளைச்சல் போட்டிக்கு குறிஞ்சிப்பாடி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டது. 
இதில், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, அயன்குறிஞ்சிப்பாடி, கட்டியங்குப்பம், கோ.சத்திரம், டி.பாளையம், வெங்கடாம்பேட்டை, வடக்குமேலூர், வடக்குத்து, ராஜாகுப்பம், பொன்வெளி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நுழைவுக் கட்டணம் செலுத்தி போட்டியில்  பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற அயன்குறிஞ்சிப்பாடி விவசாயி ஆர்.கே.ராமலிங்கம் நிலத்தில் கம்பு அறுவடை அண்மையில் நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருபாகரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன் (அண்ணாகிராமம்), சின்னகண்ணு (குறிஞ்சிப்பாடி) ஆகியோர் உடனிருந்தனர்.  
வேளாண்மை உதவி அலுவலர் தெய்வசிகாமணி ஏற்பாடுகளை செய்திருந்தார். விவசாயி ஆர்.கே.ராமலிங்கம் நிலத்தில் 20 சென்ட்  பரப்பளவில் விளைந்திருந்த கம்பு பயிரை அறுவடை செய்து அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதுபோல, மாவட்டம் முழுவதும் தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. 
பயிர்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, வெற்றி பெற்ற விவசாயி பெயர் அறிவிக்கப்படும் என வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com