அரசுப் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் என்எல்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்ற அடிப்படை வசதி பணிகளை

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் என்எல்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்ற அடிப்படை வசதி பணிகளை மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
 என்எல்சி இந்தியா நிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதி பணிகளை செய்து வருகிறது. அதன்படி, புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர், 14 சிறுநீர் கழிக்கும் கோப்பைகள், 3 கழிவறைகள் அடங்கிய இரண்டு கட்டடங்களை மாணவர்கள், மாணவிகளுக்கென தனித் தனியாக அமைத்துள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளது. எஞ்சிய சுமார் 8,600 சதுரஅடி பரப்பிலான பகுதி கிராவல் மண்ணால் மேம்படுத்தப்பட்டது. மேலும், ரூ. 5 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான மேஜைகள், நாற்காலிகள், பச்சை வண்ண நவீன போர்டுகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கியுள்ளது. ரூ.29 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான இந்தப் பணிகளை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளது.
 இந்தப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், புதிய வசதிகளைத் திறந்து வைத்தார் (படம்). ஒடிஸா மாநில வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை முதன்மை செயலர் ஜி.மதிவதனன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஆர்.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com