விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: 2 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
 இந்த விழாவின் முக்கிய அம்சமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சில நாள்கள் பூஜைக்கு பின்னர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழாவில் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
 இந்து முன்னணி சார்பில் வடலூரில் பிரமாண்ட தங்க பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், வடலூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா 3 நாள்களும், நெய்வேலி, டவுன்ஷிப், விருத்தாசலம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை ஆகிய இடங்களில் 5 நாள்களும் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. விழாவை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
 கோயில்களில் சிறப்பு பூஜை: கடலூர் பாடலீஸ்வரர் கோயில், புதுப்பளையம் இரட்டை பிள்ளையார் கோயில், முதுநகர் வெள்ளிப் பிள்ளையார் கோயில், அண்ணாநகர் ராஜ விநாயகர், சக்திவிநாயகர் கோயில், மஞ்சக்குப்பம் ஸ்ரீராஜகணபதி கோயில், கல்யாண விநாயகர் கோயில் மற்றும் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்டவை படைப்பட்டு பிரசாதங்களாக வழங்கப்பட்டன.
 விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் கொண்டாடுவதற்காக பூஜைப் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதியது. கடலூர் உழவர்சந்தை, முக்கிய கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடை வீதிகளில் சிறிய அளவிலான விதவிதமான களிமண் விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.200 வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல பழங்கள், பொரி கடலை, வெல்லம், கேழ்வரகு, கம்பு, சோளம், மற்றும் பூஜைப் பொருள்களும் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு செட் பூஜை பொருள்கள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அழகான விநாயகர் குடைகளையும் எருக்கம் மாலை, அருகம், வில்வம் ஆகியவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
 பூக்கள் விலை கடும் உயர்வு: சதுர்த்தி விழாவையொட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. முல்லை அரும்பு கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், சாமந்தி ரூ.300-க்கும் ஸ்டார் ரோஸ் ரூ.160, சாதாரன ரோஸ் ரகம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
 சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நர்த்தன விநாயகர், முக்குறுணி விநாயகர், கற்பக விநாயகர் சந்நிதிகளில் கோயில் பொது தீட்சிதர்கள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடத்தினர். மேலும், தெற்குவீதியில் உள்ள ஸ்ரீநரமுக விநாயகர், மேலரத வீதியில் உள்ள சிறைமீட்ட விநாயகர், வடக்குரத வீதியில் உள்ள திருப்பணி விநாயகர், கீழரதவீதியில் உள்ள அரசமர விநாயகர், தேரடிபிள்ளையார்கோயில் தெருவில் உள்ள ஸ்ரீராஜகணபதி, போல்நாராயணன் தெருவில் உள்ள ஸ்ரீஞானவிநாயகர், கூத்தாடும் விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் விநாயகரை தரிசித்தனர்.
 சிதம்பரம் நகரில் மேலரதவீதி, சத்யாநகர், சுப்பிரமணியர்தெரு, மன்மதசாமி கோயில் உள்ளிட்ட 23 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலைநகர், கிள்ளை, மருதூர், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள், பூஜை பொருள்கள் வாங்குவதற்காக மேலரத வீதியில் மக்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த வீதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு வழித்தடத்தில் மாற்றப்பட்டது.
 சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் வளாகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விஸ்வரூப வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன் செட்டியார் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டச் செயலர் ஜோதிகுருவாயூரப்பன் முன்னிலை வகித்தார். பக்தர்களுக்கு அன்னாதனம் வழங்கப்பட்டது. பேராசிரியர் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார். திருவாவடுதுறை மடம் ஆய்வாளர் செந்தில்குமார், மதிமுக நகரச் செயலர் எல்.சீனுவாசன், எம்.எஸ்.ஆர்.ரவி, ஜெயமுரளி கோபிநாத், தண்டபானி, அருள், பஜ்ரங்தள் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 நெய்வேலி: நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டன. பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் மொத்தம் 501 கிலோ எடையில் லட்டுகள் விநாயகருக்கு படையலிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 திட்டக்குடி: திட்டக்குடியில் நகர இந்து முன்னணி சார்பில் அதன் தலைவர் த.மா.செந்தில் தலைமையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பூஜையை ஆ.அருண்மொழிதேவன் எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். அதிமுக நகரச் செயலர் ஆர்.நீதிமன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com