விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடலூர் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடலூர் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
இந்த விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்து அமைப்புகள், கோயில் நிர்வாகங்கள், தனி நபர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரம் பெரிய அளவிலான சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சிலைகள் மட்டும் வியாழக்கிழமை மாலை நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இரண்டு நாள்கள் பூஜைக்குப் பின்னர் மீதமுள்ள சிலைகளில் பெரும்பாலான சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் சிலைகள் மேளம், தாளம் முழங்கிட ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர், கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் அந்த சிலைகளை வைத்து பூஜை செய்து கடலில் கரைத்தனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், சிலைகளைக் கொண்டு வருபவர்கள் கடலுக்குள் இறங்கி அவற்றை கரைப்பதை தடுக்கும் வகையில் சுமார் 40 போலீஸார், 20 ஊர்க் காவல் படையினர், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 35 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்கள், ஊர்க் காவல் படையினர் 25 பேர் சிலைகளைப் பெற்று கடலில் கரைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிகளை கடலூர் உள்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜோ.லாமேக் மேற்பார்வையிட்டார்.
ஊர்வலமாக வரும் வாகனங்களுக்கும், அவை திரும்பிச் செல்வதற்கு தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல, வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் பெரிய சிலைகளோடு கொண்டு வரப்பட்டு அவைகள் தனியாக உப்பனாற்றில் கரைக்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சனிக்கிழமை கடலூருக்கு கொண்டுவரப்பட்ட சூமார் 1,230 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் சுமார் 150 சிலைகள் வந்திருந்தன.
பண்ருட்டி: பண்ருட்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பங்கேற்றன. இந்து முன்னணி சார்பில் பண்ருட்டி நகர்மன்ற அலுவலகம் அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை தொழிலதிபர் எஸ்.வைரக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொழிலதிபர் கே.என்.சி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையை நோக்கிச் சென்றது.
இதேபோல, இந்து மக்கள் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடி காளி கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை, சிவமணி தொடக்கி வைத்தார். புதுச்சேரி மாநிலத் தலைவர் மஞ்சினி, மாவட்டத் தலைவர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தேவனாம்பட்டினம், பெரியகுப்பம் கடற்கரைகளிலும், பரவனாற்றிலும் கரைக்கப்பட்டன. வடலூரில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவனாம்பட்டினம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்துக்கு ஆலய மறுமலர்ச்சி குழுத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
நெய்வேலியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சாம்பல் ஏரியில் கரைக்கப்பட்டன.
இஸ்லாமியர் தொடக்கி வைத்த ஊர்வலம்!
சிதம்பரம்: சிதம்பரம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தை இஸ்லாமியர் தொடக்கி வைத்தார்.
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் 12-ஆம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமை வர்த்தக சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன் தலைமையில், இஸ்லாமியர் ஜமாலுதீன் பச்சை நிற கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
பொய்யுரையாப் பிள்ளையார் கோயிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. ராஜன் வாய்க்காலில் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வர்த்தக சங்க கெளரவத் தலைவர் சக்கரவர்த்தி, ஆசிரியர் வரதராஜன், நாட்டாமை கலியபெருமாள், ராமச்சந்திரன், திருமேனி, சசிகுமார், ராமகிருஷ்ணன், வினோத், வேலப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com