1,923 கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக விருத்தாசலத்திலிருந்து 1,923 கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக விருத்தாசலத்திலிருந்து 1,923 கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில்  உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,301 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியிலும், 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் சிதம்பரம் மக்களவை தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில் கடலூர் தொகுதியில் 21 பேர் போட்டியிடுகின்றனர். 
வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதிகபட்சம் 16 சின்னங்கள் மட்டுமே இடம் பெற முடியும். எனவே, கூடுதலாக ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் கடலூர் தொகுதியில் பொருத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, இந்த இயந்திரங்களை தொகுதிக்கு ஒதுக்கீடு செய்திட கணினி மூலமாக ஆட்சியர் அண்மையில் குலுக்கல் நடத்தினார். இதனடிப்படையில், தொகுதிகளுக்கான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் துணை அலுவலர்களிடம் வழங்கும் பணி விருத்தாசலத்தில் நடைபெற்றது. 
விருத்தாசலம் அரசு சேமிப்புக் கிடங்கிலிருந்து கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை துணை ஆட்சியர் வைத்தியநாதன், சார்-ஆட்சியர்கள் எம்.எஸ்.பிரசாந்த், கே.எம்.சரயூ, வட்டாட்சியர் 
ஐ.கவியரசு, துணை வட்டாட்சியர் முருகன் ஆகியோர் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். 
இதன்படி, சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக திட்டக்குடிக்கு-317, விருத்தாசலம்- 361,  நெய்வேலி-296, பண்ருட்டி-331, கடலூர்-291, குறிஞ்சிப்பாடி-327 என்ற எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
ஏற்கெனவே, இந்தத் தொகுதிகளுக்குத் தேவையான 2,951 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,951 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் 3,002 இயந்திரங்கள் ஆகியவை சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com