தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் கண்களால் வாக்கு சேகரிக்கிறேன்: கமல்ஹாசன்
By DIN | Published On : 12th April 2019 08:17 AM | Last Updated : 12th April 2019 08:17 AM | அ+அ அ- |

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் கண்களால் வாக்கு சேகரிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அந்தக் கட்சியின் வேட்பாளர் வி.அண்ணாமலையை ஆதரித்து, கடலூர் உழவர் சந்தையில் கமல்ஹாசன் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
எனது பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு இடங்களில் அனுமதி மறுத்துள்ளது. சில இடங்களுக்குச் செல்லலாம்; ஆனால், பேசக் கூடாதென கட்டுப்பாடு விதிக்கிறது. ஆனாலும், எனது நடிப்புத் தொழிலால் பெற்ற அனுபவத்தால் பொதுமக்களிடம் கண்களால் பேசி வாக்கு சேகரிக்கிறேன். சினிமாக்காரன் என்பதால் என்னைப் பார்க்கக் கூட்டம் கூடுவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், மக்களுக்கான திட்டங்கள் குறித்து மட்டுமே நான் பேசி வருகிறேன்.
தற்போது, காவல் துறையினர் தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு மனிதனாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். காவலர்களும் சக மனிதர்கள்தான். அவர்களிடம் தொடர்ச்சியாக வேலை வாங்குவதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளோம். கடலூர் மக்களவைத் தொகுதியில் எங்களது வேட்பாளர் வெற்றி பெற்றால் விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை, ஏரி, குளங்களைத் தூர்வாருதல், பலா, முந்திரி ஏற்றுமதித் தொழில் மேம்பாடு, மீனவர்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தருவது, சிப்காட்டினால் நிலத்தடி நீர் பாதிப்பு, என்எல்சியால் ஏற்படும் மாசு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார் அவர்.