சுடச்சுட

  

  இறுதிகட்ட பிரசார நிறைவிடத்துக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்

  By DIN  |   Published on : 16th April 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் இறுதிகட்ட பிரசார நிறைவிடத்துக்கு அனுமதி வழங்குவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.
   தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 18-ஆம் தேதி  நடைபெறுகிறது. இறுதி கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. 
  கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சியினர் தங்களது பிரசார பயணத்தை கடலூரில் நிறைவு செய்திட முடிவெடுத்துள்ளனர். வழக்கமாக, அதிமுகவினர் தங்களது பிரசார பயணத்தை பொதுக்கூட்டம் அளவில் திருப்பாதிரிபுலியூரில் சன்னதி தெருவில் பாடலீஸ்வரர் கோயில் முன் நிறைவு செய்வது வழக்கம்.
  அதிமுகவிலிருந்து பிரிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் அதே இடத்தில் நிறைவு செய்திட விரும்பி, தங்களது தேர்தல் முகவர் தணிக்கையாளர் சுந்தரமூர்த்தி மூலமாக சார் -ஆட்சியர் கே.எம்.சரயூவிடம் கடந்த 6-ஆம் தேதி விண்ணப்பித்து அனுமதி பெற்றனர்.
  இந்த நிலையில், அதிமுகவினரும் வழக்கமாக நிறைவு செய்யும் அதே இடத்திலேயே பிரசாரத்தை நிறைவு செய்திட விரும்பி மனு அளித்தபோதுதான் ஏற்கெனவே அந்த இடம் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
  இருப்பினும், தாங்களும் அதே பகுதியில்தான் பிரசாரத்தை நிறைவு செய்வோம் என்று கூறியதால், இரு கட்சியினரையும் சமாதானம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதில், உரிய தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து,  அமமுக மாவட்ட அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், தணிக்கையாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.அன்புச்செல்வனிடம் திங்கள்கிழமை மாலையில் புகார் மனு வழங்கினர். அதில், முன்னுரிமை அடிப்படையில் அனுமதி பெற்றுள்ள நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.
  அதே நேரத்தில் அந்தப் பகுதியில் இருவரும் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்வதால் தேவையில்லாத மோதல்கள் ஏற்படும் என்பதால் இரு கட்சியினருக்கும் அந்த இடத்தில் அனுமதி வழங்க வேண்டாமென காவல் துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆலோசித்து வருகின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai