சுடச்சுட

  

  கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டணிக் கட்சியினரால் திணறி வருகின்றனர்.
  கடலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர்  
  இரா.கோவிந்தசாமியும், திமுக கூட்டணி சார்பில் அந்தக் கட்சி வேட்பாளராக டி.ஆர்.வி.எஸ்.ரமேஷும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் உள்பட 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடலூர் மக்களவைத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. 
  இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கூட்டணிகளான அதிமுக, திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளது வேட்பாளரின் வெற்றிக்கு கை கொடுக்கும். அதே நேரத்தில், கூட்டணி கட்சியினரால் வேட்பாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 
   தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளரை ஒவ்வொரு கட்சியின் மாவட்ட செயலர்கள், ஒன்றிய, நகர செயலர்கள், முக்கிய நிர்வாகிகள் செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளும்போது வேட்பாளர் அதனை எடுத்துப் பேசுவதில்லை. 
  இதனால், நிர்வாகிகள் வேட்பாளர்களின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
  பல்வேறு ஊர்களில் பிரசாரம் செய்வதற்கு வேட்பாளர்கள் பயணத் திட்டம் வகுத்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திடீர் பிரசார பயணம் மேற்கொள்ளும் போது வேட்பாளரால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. உதாரணத்துக்கு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் பங்கேற்கவில்லை. இது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்ற 5 கூட்டங்களில் ஒரே ஒரு கூட்டத்தில் மட்டுமே கடைசி நிமிடத்தில் வேட்பாளர் ரமேஷ் பங்கேற்றார். இதுவும் அவர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.   அதேநேரத்தில் இதுபோன்ற நிலையானது பாமக வேட்பாளருக்கு குறைவாகவே ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர், துணை முதல்வர், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருடன் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அதே நேரத்தில் பாஜக முக்கியத் தலைவர்கள் யாரும் கடலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளாதது பாமகவினருக்கு பின்னடைவாக உள்ளது.
  இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர், கூட்டணிக் கட்சியினரை கண்டுகொள்ளவில்லை என்ற குறைபாடு அவர்களிடம் உள்ளது.
  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னணி தலைவர்களும் வாக்கு சேகரிக்க வராததோடு, ஒரு கட்சி மட்டுமே இருப்பதால் அவர் பெரிய அளவில் பிரச்னையை சந்திக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் அந்தக் கட்சி வேட்பாளருக்கு இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. 
  களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், சக போட்டியாளர்களின் வியூகங்களைச் சமாளித்தல், பிரசாரத்தில் தீவிரம் காட்டுதல், அதிக வெயிலால் ஏற்படும் சோர்வு, சொந்த கட்சியினர், கூட்டணியினரை தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள், பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். 
  ஆனாலும், தங்களது அழைப்பை வேட்பாளர்கள் ஏற்காதபோதும், தங்களது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத போதும் அது கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai