சுடச்சுட

  

  கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாமகவினர் திங்கள்கிழமை நில அபகரிப்புப் புகார் அளித்தனர்.
  கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரக டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மருத்துவர் இரா.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில்,  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனை சந்தித்த பாமக மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் புகார் மனு அளித்தார். 
  அந்த  மனுவில் தெரிவித்துள்ளதாவது: 
  பண்ருட்டி வட்டம், லட்சுமிநாராயணபுரம் ஊராட்சியில் அரசு அங்கீகாரத்துடன்  டி.ஆர்.வி.நகர் என்ற பெயரில் மனைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதில், 85 மனைகளுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சுமார் 24 ஆயிரம் சதுர அடி நிலம் மனை பிரிவில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் போலியாக "லே-அவுட்'  தயாரித்து சுமார் 15 பேருக்கு விற்பனை செய்து விட்டார். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதில் பொது உபயோக பூங்கா இடத்தில் வீடு கட்டக் கூடாது என்றும், பூங்கா தவிர ஏனைய பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் 2007-ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  எனவே, போலியாக  "லே-அவுட்' தயாரித்தது, நகர் ஊரமைப்பு துறையின் அங்கீகாரம் போலியாக தயாரித்தது ஆகியவை தொடர்பாக வேட்பாளர் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
  வழக்குரைஞர் தமிழரசன், நிர்வாகிகள் இள.விஜயவர்மன், சத்யா, பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த மனுவின் நகல் மாநில தேர்தல் ஆணையருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai