சுடச்சுட

  

  அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) விநியோகம் செய்யும் நடைமுறை கண்காணிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முறைகேடின்றி நடத்திட மாவட்ட தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முந்தைய காலத்தில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்காளர் சீட்டை (பூத் சிலிப்) தயாரிப்பார்கள். அதில், வாக்காளர் பெயர், வார்டு எண், வரிசை எண், பாகம் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, நேரடியாக வாக்காளர்களை சந்தித்து கொடுப்பார்கள். இதனால், அனைத்து வாக்காளர்களையும் அரசியல் கட்சியினர் நேரடியாகச் சந்தித்து வாக்கு கோரும் வாய்ப்பு ஏற்படும். 
  ஆனால், இதனை சில அரசியல் கட்சியினர் தவறான முறையில் பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையமே வாக்காளர் சீட்டை நேரடியாக வாக்காளர்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி மன்றச் செயலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  இதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 20.68 லட்சம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் சீட்டு வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் பணியில் அங்கன்வாடி பணியாளர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், அவர்கள் தொடர்ந்து அங்கன்வாடி மையங்களை நடத்த வேண்டியுள்ளது. இதனால், அவர்களது வழக்கமான பணிக்கு இடையில் வாக்காளர் சீட்டு விநியோகத்தையும் கவனிப்பது சிரமமாக உள்ளதாம்.
  இந்த நிலையை அரசியல் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது. 
  வாக்காளர் சீட்டை அரசியல் கட்சியினரே கைப்பற்றி, வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகித்து அவர்களிடம் பரிசுப் பொருள்களை வழங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
  எனவே, அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் வாக்காளர் சீட்டை முறைப்படி விநியோகித்தார்களா என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டுமென சுயேச்சை வேட்பாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai