சுடச்சுட

  

  நூறு வயதைக் கடந்த வாக்காளர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 
  கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது. 
  இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 
  அதன் ஒரு பகுதியாக, 100 வயதைக் கடந்த வாக்காளர்களை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  அதன்படி, கடலூர் திருப்பாதிரிபுலியூர் அக்கில்நாயுடு தெருவைச் சேர்ந்த வெங்கடேசலு மனைவி நவநீதம் (104), பாதிரிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சடகோபன் மனைவி பொற்கிளை (103) ஆகியோரை ஆட்சியர் சந்தித்து அவர்களுக்குரிய வாக்குச் சீட்டை வழங்கி வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
  பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 
  மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2,300 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கு தேவையான மின்னணு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு  முழு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 
  100 சதவீத வாக்குப் பதிவை எட்டும் வகையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றார் ஆட்சியர். 
  அப்போது, கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ, வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 20,68,523 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 80 வயதுக்கு மேலானவர்கள் 33,349 பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai