மீன்பிடி தடைக் காலம் தொடக்கம் 

மீன்பிடி தடைக் காலம் திங்கள்கிழமை தொடங்கியதை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் சுமார் 4,500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 

மீன்பிடி தடைக் காலம் திங்கள்கிழமை தொடங்கியதை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் சுமார் 4,500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 
வங்கக் கடலில் கடலூர் மாவட்டம் 57.5 கி.மீ. கடற்கரை பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில், 49 மீனவ கிராமங்கள் உள்ளன. 
மீன் பிடித்தல், தலைச் சுமையாக மீன்களை விற்பனை செய்தல், ஏற்றுமதி உள்ளிட்ட மீன் சார்ந்த தொழில்களை நம்பி சுமார் 25 ஆயிரம் பேர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 
மீன்பிடி தொழிலானது தினமும் நடைபெறும்போது மீன்வளம் குறைந்துவிடும் என்ற காரணத்தால், மீன்களின் இனப் பெருக்கக் காலத்தில் அவற்றைப் பிடிக்க அரசால் தடை விதிக்கப்படுகிறது. 
இதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தடை ஜுன் 16- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 
இதனால், மாவட்டத்தில் கடலூர் துறைமுகம், முடசல் ஓடை, சாமியார்பேட்டை ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 260 இயந்திரப் படகுகள், 2,345 பைபர் படகுகள், இயந்திரம் பொருத்தப்படாத 1,950  படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. தடைக் காலம் தொடக்கத்தால் சுமார் 4,500 படகுகளும் திங்கள்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. 
அதே நேரத்தில் கரையோரங்களில் கட்டுமரங்கள் மூலமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்படவில்லை.
ரூ.5 ஆயிரம் உதவித் தொகை: மீன்பிடி தடைக் காலத்தில் தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 
இதன்படி, மாவட்டத்தில் பதிவு பெற்றுள்ள சுமார் 11 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com